வெள்ளி, 28 நவம்பர், 2008

மைக்ரோசாப்ட் சர்பேஸ்

12:06 AM Posted by: தமிழில் கணினி 0 comments

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி

microsoft_surfaceடெஸ்க்டாப், மற்றும் லேப்டாப் கணினி வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சிறப்பானதொரு கணினியாக, இரு புறமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான கணினியாக இன்று உலகளவில் இனம் கண்டறியப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புதான் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வணிக ரீதியிலான கணினி வகைகளுள் மிகவும் சிறப்பானதொரு கணினியாக, பல வகையிலும் மேம்படுத்தப்பட்ட கணினியாக விற்பனைக்காக வர உள்ளது. இக்கணினியின் மூலம் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும். எண்ணற்ற சலுகைகளை, வசதிகளை அனுபவிக்க முடியும்.
ஏராளமான வசதிகள் இக்கணினியில் உள்ளன. நம்முடைய சாதாரணத் தொடுதல், அங்க அசைவுகள் போன்றவற்றாலேயே இக்கணினியை மிக எளிதாக இயக்க முடியும். இக்கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள 30 இன்ச் நீள, அகலம் கொண்ட அகண்ட திரையில், நாம் கணினி திரையில் பார்க்கிறோம் என்ற உணர்வே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாகப் படங்கள் தெரியும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் கண் முன்னே ஒரு நபர் அமர்ந்து நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வுதான் கண்டிப்பாக, இக்கணினியின் முன் அமர்ந்துள்ளவர்களுக்குத் தோன்றும்.

அந்த அளவுக்குப் படக்காட்சிகள் தெள்ளத் தெளிவாக உள்ளன. இதன்மூலம், கணினி முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் சலிப்பு, எரிச்சல் போன்றவை இக்கணினியின் முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படாது. பார்க்க....பார்க்க ஒரு விதப் பரவச உணர்வு ஏற்படுவது நிச்சயம் என்பதால், இக்கணினியைப் பயன்படுத்தலாம்....பயன்படுத்தலாம்....தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கலாம். அந்த அளவுக்கு இந்தக் கணினியால் எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த ஒரு சலிப்பும் தட்டாது.

சர்ஃபேஸ் கணினி- ஓர் பார்வை

தற்போது புழக்கத்தில் உள்ள இதர சாதாரணக் கணினிகளில் இருந்து சர்ஃபேஸ் கணினி முற்றிலும் மாறுபட்டது என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். மேலும், மற்ற சாதாரண கணினிகளைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும், இந்தக் கணினியைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என்றும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. சர்ஃபேஸ் கணினியில் உள்ள நான்கு மிக முக்கிய அம்சங்கள் குறித்து மைக்ரோசாப்ட் பட்டியலிட்டுள்ளது. அவை:

1. நேரடித் தகவல் பரிமாற்றம்: பொதுவாகவே, ஒரு கணினியை இயக்குவதற்கு மௌஸ் அல்லது கீ போர்டு கண்டிப்பாகத் தேவை. அப்போதுதான், கணினியில் உள்ள தகவல்களை நம்மால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். ஆனால் சர்ஃபேஸ் கணினியை இயக்க மௌஸ் அல்லது கீ போர்டு எதுவுமே தேவையில்லை. நம்முடைய அங்க அசைவு அல்லது தொடுதல் மூலம் எந்த ஒரு தகவலையும் கேட்கவோ, பார்க்கவோ, அனுப்பவோ முடியும்.

2. பலமுனைத் தொடுதல்: பொதுவாகவே, டச் ஸ்கிரீன் முறைகளை எடுத்துக் கொண்டால், ஒரு நேரத்தில் ஒருவரால் மட்டுமே அதுவும் ஒரு முறை மட்டுமே அந்த ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்க முடியும். ஆனால், சர்ஃபேஸ் கணினியில் அப்படியில்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எவ்வளவு பேர் வேண்டுமானாலும், அதிலுள்ள டச் ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் பலரும், பலவித வேலைகளைக் கொடுக்கும் போது, யாருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என கணினி குழம்பிப் போகாது. கண்டிப்பாக, அனைவரின் கட்டளையையும் பதிவு செய்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டது.

3. பலமுனை பயன்பாடு: பொதுவாகவே, ஒரு கணினியை ஒருவரால்தான் இயக்க முடியும். அதிகபட்சம், இரண்டுபேர் அதனை இயக்கலாம். ஆனால், அதற்கும் மேற்பட்ட நபர்களால் கண்டிப்பாக இயக்கவே முடியாது. ஆனால், சர்ஃபேஸ் கணினியைப் பொறுத்தவரை, எவ்வளவு பேர் வேண்டுமானாலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். தனியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. படத்துக்கு அங்கீகாரம்: பொதுவாகவே, கணினி திரையில் தெரியும் பிம்பங்களுக்குப் பெயர் சூட்டுவது வழக்கம். ஆனால், இதில், பெயர் சூட்டுவதற்குப் பதிலாகப் படங்களைக் கூட வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு சர்ஃபேஸ் கணினி பரிபூரண ஒத்துழைப்பு அளிக்கும். இதன்மூலம், டிஜிட்டல் வகை தகவல்களையும் படங்களை வைத்து எளிதில் அனுப்பிக் கொள்ளலாம்.

சர்ஃபேஸ் கணினி & வேலை செய்யும் விதம்

சர்ஃபேஸ் கணினியில் பிரத்யேகக் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கணினியின் முன் அமர்ந்துள்ள நபரின் அங்க அசைவுகளைக் கணினி புரிந்து கொள்ளும். அதுபோல், அவர் என்ன தொடுகிறார்? எதற்காக தொடுகிறார்? போன்ற விஷயங்களையும் மிக விரைவாக, எளிதாகப் புரிந்து கொள்ளும்.

இந்தக் கணினியில் இன்ஃப்ரா ரெட் எனப்படும் அகச்சிவப்புக் கதிரும் இருப்பதால், நாம் மேஜைக்கு அடியில் கை வைத்திருந்தாலும், அந்தக் கை அசைவின் தன்மையை சர்ஃபேஸ் கணினி எளிதில் இனம் கண்டு கொள்ளும். எனவே, அந்த கை நகர்வுக்கு ஏற்ப, திரையிலும் நகர்தல் இருக்கும். நம்மைத் தொடுவது கையா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்பதையும் சர்ஃபேஸ் கணினி எளிதாக இனம் கண்டு கொள்ளும். இதற்காக விஷேச லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கை விரலுக்குப் பதிலாக, பெயின்ட் பிரஷ்ஷைக் கொண்டு கணினியை இயக்குகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்....

கணினியைத் தொடுவது கை விரலா? அல்லது பெயின்ட் பிரஷ்ஷா என்பதை சர்ஃபேஸ் கணினி நொடியில் புரிந்து கொண்டு, அதற்குத் தக்கபடி திரையில் தன் பதிலைத் தெரிவிக்கும். இதன் அகண்ட திரைதான், இதன் சிறப்பம்சமே. இந்தத் திரையைப் பொருத்துவதற்கு மேஜைதான் தேவை என்றில்லை. சுவற்றில் கூட அப்படியே மாட்டி வைக்கலாம். கண்ணாடி பொருத்தும் இடத்தில்கூட பொருத்திக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்....உங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜின் கதவில் கூட பொருத்திக் கொள்ளலாம். எடை அதிகமிருக்காது. வீட்டின் எந்த மூலையிலும் இதை எளிதாகப் பொருத்தி, இயக்கலாம். கையாளலாம்.

எப்போது வணிக ரீதியாக விற்பனைக்கு வரும்?

அமெரிக்காவிலுள்ள ஏ.டி.அண்டு டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்வூட் ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ், டி&மொபைல்(யூ.எஸ்.ஏ.,) ஆகிய நிறுவனங்களைத்தான் தன்னுடைய அதிகாரப்பூர்வ வியாபாரப் பங்குதாரர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் உள்ள சில்லரை விற்பனை நிலையங்களுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கும்.

இப்போதே அமெரிக்காவில், சர்ஃபேஸ் கணினிக்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளதாம். சில்லரை வணிகத்தில் விற்கத் தொடங்கினால், மற்ற நிறுவனக் கணினிகள் அனைத்தும் அப்படியே விற்காமல் நின்று போய்விடும். அந்த அளவுக்கு கணினி விற்பனை வரலாற்றில் சர்ஃபேஸ் கணினி ஒரு மிகப்பெரிய சகாப்தத்தையே ஏற்படுத்தப் போகிறது. இதன் வரவை அனைவரும் எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் சர்ஃபேஸ் கணினிகள் முழு வீச்சில் சில்லரை வணிகம் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சர்ஃபேஸ் கணினி பற்றிய சில வீடியோ தொகுப்புகளும் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தொகுப்பில், இந்தக் கணினியைப் பற்றிய முழு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சர்ஃபேஸ் கணினியைப் பற்றி பார்த்திராத, கேட்டிராத, அறிந்திராத பல தகவல்கள் இந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.

இணையதளத்தில் சர்ஃபேஸ் கணினி

கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் சர்ஃபேஸ் கணினியைப் பற்றிய விவரங்களை நீங்கள் பார்த்து, தெரிந்து, அறிந்து கொள்ளலாம்.

Press Release: http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx

Product Team Blog: http://blogs.msdn.com/surface/
Product Homepage: http://www.microsoft.com/surface/index.html
Product Demo Videos: http://www.microsoft.com/surface/videos.html

கட்டுரையாளர் பற்றி
vinothகட்டுரையாளர் திரு:வினோத்குமார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரத்தியேகத் தயாரிப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதும் தொழில்நுட்ப எழுத்தாளர். இத்துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உண்டு. எழுத்தாளர் மட்டுமல்லாது, பேச்சாளரும் கூட. ஏராளமான பொதுக்கூட்டங்களில், கருத்தரங்குகளில் பேசியுள்ளார்.
அவரின் இணைய தளம் www.ExtremeExperts.com என்ற இணையத்தளத்துக்கு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 


2009 தமிழில் கணினி. All rights reserved.
Powered by Beta Templates and Blogger.
Template and Icons by DryIcons.com